தமிழ் முரசில் 1936–1960 வரை வெளிவந்த சிறுகதைகள் – ஒரு பார்வை
Sundari Balasubramaniam reviews a selection of short stories published in Tamil Murasu during the tumultuous years from 1936 to 1960 when Singapore transitioned from British rule and Japanese Occupation to self-governance.
தமிழிலக்கியம் என்பது தமிழ் நாட்டுக்கு மட்டும் என்ற நிலை மாறி இன்று உலகெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்களால் மட்டுமின்றி பல வெளிநாட்டவர்களாலும் செழுமைப்படுத்தப்படுகிறது. குறிப்பாக இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் வாழும் எண்ணற்றத் தமிழர்கள் இன்றும் சிறந்த படைப்புகளை வெளியிட்டுத் தமிழை உன்னத நிலைக்கு உயர்த்திச் செல்கின்றனர். செழிப்பான வாழ்வாதாரத்தைத் தேடி இங்கு குடியேறிய தமிழர்கள்தான் ஆரம்பகாலங்களில் தமிழ் மொழியை வளர்க்கப் பாடுபட்டனர்.1 தமிழ் மொழி மீது அவர்களுக்கிருந்த ஆர்வமும் தங்களை இலக்கியவாதிகளாக அடையாளப்படுத்திக் கொள்ளும் போக்கும் இதற்கு உறுதுணையாக இருந்தன. ஆனால் அன்றைய எழுத்தாளர்கள் பொருளாதார வசதியில் பின்தங்கியிருந்தனர். பலர் தினக் கூலிகளாகவும், சாலை இடும் வேலையிலும், துறைமுகத்திலும், தோட்டங்களில் வேலை செய்பவர்களாகவும் இருந்தனர். ஆனால் அனைவரும் தாங்கள் ஒரு எழுத்தாளராக அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பாடுபட்டனர். இந்த ஆர்வத்தால் அவர்கள் தமிழில் சுயமாகவே, இலக்கணப்பிழை இல்லாமல் கதை, கவிதை எழுத, மேடைகளில் பேசக் கற்றுக்கொண்டனர். பி. கிருஷ்ணன் அவர்கள் தம்மைப்பற்றிக் கூறும்பொழுது, தாமாகவே சங்க இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.2 இவரைப்போல் பலரும் தங்களைச் சிறந்த எழுத்தாளர்களாக்கிக்கொள்ளப் பாடுபட்டனர். அதில் பலனும் கண்டனர். அவர்களுள் சிலர் வானொலியிலும் பத்திரிக்கைத் துறையிலும் வேலை செய்தனர். பி. கிருஷ்ணன், ந. பழநிவேலு போன்றோர் வானொலியில் வேலைசெய்ததால் அவர்கள் படைப்பிற்குப் பணமும் கிடைத்தது. மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை.
தமிழுக்கு ஆதரவு
1935-இல் கோ சாரங்கபாணி ஆசிரியராக இருந்து ஆரம்பிக்கப்பட்ட தமிழ் முரசு நாளிதழ், தமிழ் நேசன் நாளிதழ் போன்றவை எழுத்தாளர்களுக்கு ஒரு களம் அமைத்துத் தந்தன. 1936 இல் கோ சாரங்கபாணி தமிழ் முரசின் உரிமையாளரானார். அவர் ஆரம்பித்த தமிழர் முன்னேற்ற கழகம் பல நாடகங்களை அரங்கேற்றியது. அவை பெரும்பாலும் தமிழ் மக்களிடையே நிலவிய சாதி வேற்றுமை, தமிழ் மக்களின் தன்னம்பிக்கையற்ற நிலை, பெண்கள் முன்னேற்றம், மூட பழக்கவழக்கங்கள் போன்ற சீர்திருத்தக்கருத்துக்களை முன்வைத்து எழுதப்பட்ட நாடகங்களாகும். மேலும் தமிழர் திருநாள், பொங்கல் திருநாள் ஆகிய சமூகக் கொண்டாட்டங்கள் அக்காலகட்டத்தில் மக்களின் அறிவுப்பசிக்கு விருந்தாக அமைந்தன. கவிதை, கதை எழுதும் போட்டிகள், மக்களின் எழுத்தார்வத்தைப் பெரிதும் வளர்த்தன. 1932-இல், கோ. சாரங்கபாணி. ‘தமிழ் எங்கள் உயிர்’ என்னும் குறிக்கோளுடன் நிதி திரட்டி, 1956-இல், சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் தமிழை முதன்மையாகக் கொண்ட இந்திய ஆய்வுத் துறை தொடங்க வழி செய்தார். பின்பு 1959-இல், இத்துறை கோலாலம்பூருக்கு மாற்றப்பட்டது.3
தமிழ் முரசில் எழுதிய நம் எழுத்தாளர்களுள் வெகு சிலரே தங்கள் படைப்புகளை புத்தகமாக வெளியிட்டனர். பலரின் குறைந்த வருமானத்தில் அது வெறும் கனவாகவே இருந்தது. 1963 ஆம் ஆண்டில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தினால் தமிழ் முரசு பதிப்பகம் ஒரு வருடகாலம் மூடப்பட்டது. அதன் விளைவாக கோ. சாரங்கபாணி ஆரம்பித்த தமிழர் திருநாளும் நிறுத்தப்பட்டது. 1964 ஆம் ஆண்டு மீண்டும் பதிப்பை ஆரம்பித்ததும் எழுத்தாளர்கள் மீண்டும் தங்கள் எழுத்துப் பணியைத் தொடர்ந்தனர்.4 அத்துடன் சிங்கப்பூர், மலாயா வானொலிகளும் அவர்களின் படைப்புகளை ஒலிபரப்பின. 1950களில் வானொலியில் பல தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கென்று தனி நிகழ்ச்சிகள், கதை நேரம், நாடக அரங்கம், கவிதை அரங்கம் போன்ற பல அங்கங்கள் தமிழை செழுமையாக வளர்க்க உதவின.
இக் கட்டுரை, 1936 முதல்1960 வரை தமிழ்முரசில் வெளிவந்த சிறுகதைகள் பற்றிய ஓர் அலசலாகும். இந்த காலகட்டத்தில் சிங்கப்பூர் பல சவால்கலைச் சந்தித்தது. போர், ஜப்பானிய ஆதிக்கம், அதைத் தொடர்ந்த ஒரு நிலையில்லாத அமைதியற்ற காலம் என வரிசையாக மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கிய காலம். அத்தகைய 50, 60களில் அதிகமான சிறுகதைகள் வெளிவந்தன. தேசிய நூலக வாரியம் வெளியிட்டுள்ள தொகுப்பில்5 602 சிறுகதைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மக்களின் ஆர்வமும், தமிழ்ப் பற்றுமே இதற்குக் காரணமாகும்.
1935–1960: தமிழ் முரசு
நா. கோவிந்தசாமி 30களைச் சீர்திருத்தக் காலம் எனக் கூறுகிறார்.6 1930களில் தமிழ் முரசில் வெளிவந்த சிறுகதைகளில் பெரும்பாலும் சீர்திருத்த கருத்துக்களும், காதல் கதைகளுமே அதிகமாகக் காணப்பட்டன. அக்காலகட்டங்களில் மக்கள் அதிக மூடப் பழக்கவழக்கங்களால் கட்டுண்டிருந்தனர். விதவைகளை ஒதுக்குவது, சகுணங்கள் பார்ப்பது, சாதிக்கு முக்கியத்துவம் கொடுப்பது, என பலவகைகளில் பிற்போக்கான நிலைத்தன்மை கொண்டிருந்தனர். அவை எல்லாவற்றையும் தம் படைப்புகளில் சாடினார், ந.பழநிவேலு. 30களில் அதிகமாகத் தமிழ்முரசில் கதை எழுதியவர்களுள் ந. பழநிவேலும் ஒருவர். இவரின் கதைகளில், விதவைகள் மறுமணம் புரிந்தனர். மேல்மட்ட வகுப்பினரும் கீழ்மட்ட வகுப்பினரும் திருமணத்தில் ஒன்றுகூடினர். அடிமைத்தனத்தை விட்டு அநியாயத்தை எதிர்த்தனர். பெண்கள் அடக்குமுறையை எதிர்த்துப்போராடினர். இளைஞர்கள் சீர்திருத்தக் கல்யாணம் செய்தனர்.
கதைப் பின்னணிஇரட்டைத் தலைப்புகள்
30 களில் இரட்டைத் தலைப்புகள் கொண்ட சிறுகதைள் பல காணப்பட்டன. தமிழகக் கதைகளிலும் இவ்வழக்கம் கையாளப்பட்டுள்ளது.7 கதையின் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் முதலிலும் பிறகு கதையின் கருப்பொருளும் வருகிறது. கதையின் தலைப்பு மக்களிடம் ஆர்வத்தைத் தூண்டவல்லதாக இருக்கவேண்டும் என எழுத்தாளர்கள் நினைத்திருக்கலாம். ந. பழநிவேலு எழுதிய “சுகுண சுந்தரம் அல்லது ஜாதிக் கொடுமை” (1936, செப்.12) சாதி வேற்றுமையால் காதலர்கள் இறக்கும் கொடுமையைச் சித்திரிக்கிறார். எம். ஆறுமுகம் எழுதிய “ஞான சேகரன் அல்லது காதலின் விளைவு” (1937, பிப்.20) என்ற கதையிலும் சாதி வேற்றுமையால் காதல் நிராகரிக்கப்பட்டு காதலர்கள் இறக்கின்றனர். வை. ராஜரெத்தினம் எழுதிய “கனகம் அல்லது கலக்கமுற்ற காரிகைகள்” (1937, ஜூன்.22) என்ற கதையில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை எதிர்க்கும் கதாநாயகனைக் காணலாம். த. ராஜம்மா எழுதிய “உத்தம நண்பன் அல்லது குணசுந்தரியின் மனமாற்றம்” (1940, ஜன.6) என்ற கதையில் மாற்றாந்தாய் கொடுமையும் பிறகு நண்பனின் உதவியால் அவள் மனமாற்றம் அடைந்து குழந்தைகளைப் பேணுவதும் சுவையாகக் கூறப்பட்டுள்ளன.
(மேலே வலப்புறம்) மனைவி லிம் பூன் நியோ அவர்களுடன் கோ. சாரங்கபாணி. எல்லா உரிமையும் பெற்றது, தமிழவேள் நினைவாஞ்சலி மலர்: 16-3-1975. (1975). சிங்கப்பூர்: தமிழ் முரசு. (Call no: Tamil RSING 959.5705 THA-[HIS])
40, 50களில் தினசரி வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளே கதைகளில் அதிகமாகக் காணப்பட்டன. நாட்டின் நடப்பு விவகாரங்கள் குறித்த கதைகள் குறைவே.8 ச. குருசாமி, வல்லிக்கண்ணன், ந. பழநிவேலு, அறிவானந்தன், மு.சு. குருசாமி, முருகு (அ. முருகையன்), ரெ. கார்திகேசு, தே. நவமணி, மா. ராமையா, இராச இளவழகன், தமிழ்ச்செல்வன், துலாக்கோல், புதுமைதாசன் (பி. கிருஷ்ணன்), வள்ளிமணாளன் (சே.வெ. சண்முகம்) போன்றோர் அதிகமாகக் கதை எழுதியவர்கள். இக்காலகட்டத்தில் வெளிவந்த கதைகள் பலவும் வறுமை, காதல், தியாகம், காதலுக்காகத் தன்னுயிர் மாய்த்துக் கொள்ளுதல், சாதிக் கொடுமை, தொழிலாளிகளைக் கொடுமைப்படுத்தும் முதலாளிகள், மூடநம்பிக்கை போன்ற கருத்துக்களே மேலோங்கி இருந்தன. சிங்கப்பூர் பின்னணியில் வெகு சில கதைகளே வெளிவந்தன. தமிழ் நாட்டின் தாக்கமே மேலோங்கியிருந்தது. இவர்களின் கதைக் கருப்பொருளை பின்வருமாறு பிரிக்கலாம்:
- காதல்
- வறுமை
- சமூகச் சீர்கேடுகள்/சாதி வேற்றுமை/ மூடநம்பிக்கை
காதல்
1940, 50 60களில் வெளிவந்த சிறுகதைகள் மிகுதியாகக் காதல் கருப்பொருளையேக் கொண்டிருந்தன. அதிலும் சாதி வேற்றுமையால் பிரிந்த காதலர்கள், குடும்பக் கௌரவத்தினால் பிரிந்த காதலர்கள், மற்றவர்களுக்காகக் காதலைத் தியாகம் செய்தவர்கள், காதல் கைகூடாமல் உயிரைவிட்டவர்கள் என இவைகளைச் சுற்றியேகதைகள் பின்னப்பட்டிருந்தன
“இதுதான் வாழ்க்கை”9 என்ற கதை, பெற்றோர்களால் ஒன்று சேர முடியாமல் பிரிந்த காதலர்கள் பற்றியது. “மயக்கம் தெளிகிறது”10 என்ற கதையில் ஆணவம் கொண்ட மனைவியால் கணவன் அடையும் துன்பமும் பிறகு அவள் திருந்தி கணவனை மதித்து நடத்தலும் கதையின் கருப்பொருளாகும். “பிரிவு”11 என்ற கதையில் வெளிநாட்டு மாப்பிள்ளைக்குத் தன் பெண்ணை திருமணம் செய்து கொடுத்தாலும் அவளை அனுப்ப மனமில்லாமல் தன்னுடனே வைத்துக்கொள்கிறார் பெண்ணின் தந்தை. கணவன் மேல் கொண்ட அன்பால் வாடிய மகள் இறந்து விடுகிறாள். “அனாதைக் குடும்பம்”12 என்ற கதையில் இருவேறு இனத்தவர் காதலித்து மணம் முடிக்கின்றனர். ஆனால் இருவரின் கலாசாரமும் வேறு என்பதால் வாழ்க்கையில் சந்தேகப் புயல் வீசுகிறது. பிறகு தெளிவடைகின்றனர். “குடும்பப் பெருமையா?”13 என்ற கதையில் குடும்பப் பெருமையைக் காரணம் காட்டி மகளின் காதலை எதிர்க்கும் பெற்றோர் அவளை ஒரு நோயாளிக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். சில வருடங்களில் விதவையான அவளை, அவள் காதலன் மறுமணம் செய்ய அனுமதி வேண்ட, அதையும் மறுக்கும் அவர்கள் இறுதியில் அவளைக் காலனுக்குப் பலிகொடுக்கின்றனர்.
வறுமை
காதலுக்கு அடுத்தபடியாக அதிகமாக வந்த கதைகள் வறுமையைக் கருபொருளாகக் கொண்டுள்ளன. கொந்தளிப்பான அக்காலகட்டத்தில் மக்களின் வாழ்வாதாரமே போராட்டத்தில் இருந்தது. ஆயினும் அவர்களின் எழுத்தார்வம் குறையவில்லை. தங்கள் வறுமையை, வாழ்க்கையின் போராட்டங்களை எழுத்தில் வெளிக்கொணர்ந்தனர்.
“அப்பாவும் மகனும்”14 என்ற கதையில் செல்வந்தரான தந்தை இறுதிவரை தன் மறுமகள் ஏழை என்ற ஒரே காரணத்தினால் அவளை ஏற்க மறுக்கிறார். “அவளும் கெட்டாள்” என்ற கதையில் ஏழை தகப்பனால் தன் பகட்டான வாழ்வுக்கு உதவ முடியாததால் தன் படிப்பையும் நிறுத்தி பலரின் ஆசை நாயகியாய் வலம் வந்த நாயகி இறுதியில் தன் தவறை உணர்கிறாள். “தங்கச்சங்கிலி”15 என்ற கதையில் கூலித் தொழிலாளி ஒருவன் வறுமையால் தன் குடும்பத்தைத் தொலைக்க நேர்ந்த நிலையைக் காட்டுகிறார் ஆசிரியர். “அனாதை”16 என்ற கதையில் ஒரு அனாதைக்கு உதவும் இரக்க குணம் மக்களுக்கு இல்லாததால் பசியால் அவன் இறக்க நேரிடுகிறது. “கடைசி முடிவு”17 என்ற கதையில் வேலையிடத்தில் ஆட்குறைப்பு செய்ததால் வேலை இழந்து, கடன் அடைக்க வழியில்லாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் ஒருவனின் நிலையை விவரிக்கிறது. “துணை”18 என்ற கதையில் பணம் படைத்தவர்கள் உதவாமல் விரட்டப்படும் ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு ஏழை கிழவி உதவுகிறாள். ஒரு ஏழைதான் மற்றொரு ஏழையின் துன்பத்தை உணர முடியும் என்பதாக முடிக்கிறார் ஆசிரியர்.
சமூகச் சீர்கேடுகள்/முதலாளி கொடுமை
சமூகச் சீர்கேடுகள், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகள் போன்ற நடைமுறைகள் இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தும்.
“பால் அபிஷேகம்”19 என்ற கதையில் ஏழை குழந்தையின் பசிக்கு பால் கொடுக்க மனமிலாத மக்கள் கோவில் சிலைக்குப் பால் அபிஷேகம் செய்வதை சாடுகிறார் ஆசிரியர். “சமூக சேவகி”20 என்ற கதையின் நாயகி சமூக சேவை என்ற போர்வையில் விபசாரம் செய்கிறாள். “பண்பும் பெயரும்”21 என்ற கதை லஞ்சம் வாங்கும் அதிகாரியைப் பற்றியது. பணமாக வாங்காமல் அன்பளிப்பு என்ற பெயரில் பொருளாக வாங்குவதைச் சாடுகிறார். “உயர்வும் தாழ்வும்”22 என்ற கதை, அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பொய்யான மருத்துவச் சான்றிதழைக் காட்டி உல்லாச பயணம் செல்வதை வழக்கமாக்கிக் கொள்வதைக் கூறுகிறது. “அனுதாபத்துக்கு உரியவள்”23 என்ற கதை ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துகிறது. வெளியில் மனைவியை மதிப்பவன்போல் நடிக்கும் கணவன், வீட்டில் அவளைச் சந்தேகித்து வார்த்தைகளால் கொடுமை படுத்துகிறான். “கஸ்தூரி”24 என்ற கதை பெண்ணிற்கு இழைக்கும் கொடுமையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. “பிள்ளையோ பிள்ளை”25 என்ற கதையில் முதலாளியின் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் வேலையாளின் மனைவி தன் கணவன், குழந்தை என அனைவரையும் இழந்து மனநோயாளியாகிறாள்.
முடிவுரை
அக்காலக்கட்டத்தில் ஈ. வே. பெரியார் அவர்கள் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கம் இங்கும் எதிரொலித்தது. 1929-இல் அவரின் வருகை இங்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. சிங்கப்பூர்த் தமிழர்களின் வாழ்வில், அரசியல் கலப்பில்லாத சமூகச் சீர்த்திருத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே 1932-இல் தமிழர் சீர்திருத்தச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அடுத்து 1935-இல் தோன்றிய தமிழ் முரசு தமிழர்களிடையே ஏற்பட்ட கலை, இலக்கிய ஆர்வத்திற்கு வித்திட்டது.
சில கதைகள் தவிர, பெரும்பாலானவை, தமிழ்நாட்டு சமூக வாழ்க்கையையே பிரதிபலித்தன. சாதி ஒழிப்பு, கைம்பெண் மணம், பொருந்தா மணம், வறுமை, பொருளாதார ஏற்றத் தாழ்வு, மூடநம்பிக்கை போன்ற கருப்பொருள்களையே கொண்டிருந்தன. மேலும் அன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு இருந்த பொழுதுபோக்கு நாடகங்களும், திரைப்படங்களும்தான். அவற்றின் தாக்கங்களும் இச்சிறுகதைகளில் காணலாம்.26
போர்க்காலங்கள், நிலையில்லாத கொந்தளிப்பான காலங்கள் என தடைகள் பல இருந்தாலும் அக்காலகட்ட படைப்புகள்தாம் சிங்கப்பூர் இலக்கியத்திற்கு வித்திட்டன என்று கூறினால் அது மிகையன்று. இன்று பலவாறாக வளர்ச்சி கண்டிருக்கும் சிங்கை தமிழ் இலக்கியத்திற்கு மூல காரணம் நம் முன்னோடி எழுத்தாளர்களின் ஆரம்பகால படைப்புகளேயாகும்.
Sundari Balasubramaniam is a Librarian with the National Library, Singapore. Her responsibilities include managing and developing the Tamil collection at the Lee Kong Chian Reference Library as well as the provision of reference and research services.
NOTES
-
பன்னீர்செல்வம், செ. ப [Pan̲n̲īrcelvam, Ce. Pa]. (2014). சிங்கப்பூர்த் தமிழ் முன்னோடிகள்: சமூக வரலாற்று நூல் [Ciṅkappūrt tamil̲ mun̲n̲ōṭikaḷ: Camūka varalār̲r̲u nūl] சிங்கப்பூர்: தங்கமீன் பதிப்பகம் [Ciṅkappūr: Taṅkamīn̲ patippakam]. (Call no.: Tamil RSING 305.8914105957 PAN) ↩
-
சிவகுமாரன், ஆ., & பாலசுப்ரமணியம், சு. [Civakumāran̲.பி., & Pālacupramaniyam, C.] (Eds.). (2012). பி. கிருஷ்ணனின் (புதுமைதாசன்) இலக்கியப் படைப்புகள், ஓர் ஆய்வு = Literary criticism of P. Krishnan’s (Puthumaithasan) works (p. 10). சிங்கப்பூர்: தேசிய நூலக வாரியம் [Ciṅkappūr: Tēciya Nūlaka Vāriyam]. (Call no.: Tamil RSING 894.811 PKR) ↩
-
Pillai, G., & Kesavapany, K. (Eds). (2016). 50 years of Indian community in Singapore (p. 52). Singapore: Hackensack, NJ: World Scientific. (Call no.: RSING 305.89141105957 FIF) ↩
-
Tamil Murasu suspended its publication from 15 July 1963. [See 105 press workers out on strike. (1963, July 15). The Straits Times, p. 5. Retrieved from NewspaperSG]. The Star Press published that the newspaper announced its intension to go into voluntary liquidation and gave two months’ notice to its workers. The workers were not satisfied with the financial settlement and 105 workers went on strike. It resumed publication only from 11 July 1964. ↩
-
பாலசுப்ரமணியம், சு., நடராஜன், ய. தே., &, சீதாலட்சுமி [Cuntari Pālacupramaṇiyam, C., Naṭarājan̲, Y. T., & Cītālaṭcumi]. (Eds.). (2009). சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள் ஓர் அடைவு, 1930–1960 = Annotated bibliography of Tamil short stories and poetry, 1936–1960. Singapore: National Library Board. (Call no.: Tamil RSING 016.894811 SIN-[LIB]) ↩
-
கோவிந்தசாமி நா. [Govindasamy, Na]. (1979). சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சி: சமூகவியற் கண்ணோட்டம். In சிங்கப்பூரில் தமிழும் தமிழிலக்கியமும்: ஆய்வரங்க மாநாட்டுக் கட்டுரைகள் = Tamil language and literature in Singapore: Seminar conference proceedings (p. 24). சிங்கப்பூர்: சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை [Ciṅkappūr: Ciṅkappūr Tēciya Palkalaik Kal̲akat Tamil̲p Pērav]. (Call no.: Tamil RCLOS 494.811095957 SIN) ↩
-
ஸ்ரீலக்ஷ்மி M. S. (2009, November). சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய முன்னோடிகள்-ஓர் அறிமுகம்: ந. பழநிவேல. Vallinam – A Magazine for Arts and Literature, 11. Retrieved from Vallinam website. ↩
-
Pillai & Kesavapany, 2016, pp. 51—53. ↩
-
பழநிவேலு, ந. (1952, ஜூலை 6). “இதுதான் வாழ்க்கை”. தமிழ் முரச, பக். 3. Retrieved from NewspaperSG. ↩
-
பழநிவேலு, ந. (1952, அக்டோபர் 5).“மயக்கம் தெளிகிறது”. தமிழ் முரச, பக். 3. Retrieved from NewspaperSG. ↩
-
பழநிவேலு, ந. (1952, அக்டோபர் 12). “பிரிவு”. தமிழ் முரச, பக். 3. Retrieved from NewspaperSG. ↩
-
புதுமைதாசன். (1953, மே 20). “அனாதைக் குடும்பம்”. தமிழ் முரசு, பக். 4. Retrieved from NewspaperSG. ↩
-
நாகையன், ரா. (1953, பிப்ரவரி 15). “குடும்பப் பெருமையா?” தமிழ் முரச, பக். 10. Retrieved from NewspaperSG. ↩
-
பழநிவேலு, ந. (1952, ஜூலை 27). “அப்பாவும் மகனும்”. தமிழ் முரச, பக். 9. Retrieved from NewspaperSG. ↩
-
புதுமைதாசன். (1953, ஜனவரி 7). “தங்கச்சங்கிலி”. தமிழ் முரச, பக். 5. Retrieved from NewspapaerSG. ↩
-
சிங்கை முகிலன். (1953, ஜனவரி 11). “அனாதை”. தமிழ் முரசு, பக். 10. Retrieved from NewspaperSG. ↩
-
வல்லிக்கண்ணன். (1954, பிப்ரவரி 21). “கடைசி முடிவு”. தமிழ் முரச, பக். 4. Retrieved from NewspaperSG. ↩
-
வல்லிக்கண்ணன். (1954, பிப்ரவரி 28). “துணை”. தமிழ் முரச, பக். 10. Retrieved from NewspaperSG. ↩
-
வல்லிக்கண்ணன். (1952, நவம்பர் 16). “பால் அபிஷேகம்”. தமிழ் முரச, பக். 4. Retrieved from NewspaperSG. ↩
-
Vallikannan. (1952, நவம்பர் 26). “சமூக சேவகி”. தமிழ் முரச, பக். 6. Retrieved from NewspaperSG. ↩
-
வல்லிக்கண்ணன். (1952, December 3) “பண்பும் பெயரும்”.தமிழ் முரச, பக். 9. Retrieved from NewspaperSG. ↩
-
வல்லிக்கண்ணன். (1953, ஜனவரி 11). “உயர்வும் தாழ்வும்”. தமிழ் முரசு, பக். 9. Retrieved from NewspaperSG. ↩
-
வல்லிக்கண்ணன். (1954, ஏப்ரல் 11). “அனுதாபத்துக்கு உரியவள்”. தமிழ் முரச, பக். 10. Retrieved from NewspaperSG. ↩
-
சண்முகம், சே. வெ. (1959, நவம்பர் 29). “கஸ்தூரி”. தமிழ் முரச, பக். 11. Retrieved from NewspaperSG. ↩
-
தங்கராசன், மு. (1960, மார்ச் 6). “பிள்ளையோ பிள்ளை”. தமிழ் முரச, பக். 4, 10. Retrieved from NewspaperSG. ↩
-
கண்ணபிரான் இ. [Kannabiran, I]. (1977). சிங்கப்பூரில் தமிழ்ச் சிறுகதை. In அ, வீரமணி, [A, Vīramani]. சிங்கப்பூரில் தமிழும் தமிழிலக்கியமும் :ஆய்வரங்க மாநாட்டுக் கட்டுரைகள் = Tamil language and literature in Singapore: Seminar conference proceedings (pp. 24–26). சிங்கப்பூர்: சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை [Ciṅkappūr: Ciṅkappūr Tēciya Palkalaik Kal̲akat Tamil̲ Pēravai]. (Call no.: Tamil RSING 494.811095957 TAM) ↩