சிங்கைப் பத்திரிகைகளில் 1920–1960 வரை வெளிவந்த விளம்பரங்கள்- ஒரு பார்வை
Sundari Balasubramaniam examines Tamil print advertisements published between the 1920s and 1960s, and discovers fascinating insights of life during this period.
(வலது) டேங்க் ரோடு ரயில் நிலையம் அருகில் இந்தியன் காப்பி கிளப் இயங்கி வந்தது. அன்புரிமைச் சலுகை , சிங்கப்பூர் தேசிய ஆவணக்காப்பகம்.
விளம்பரம் என்பது வணிக நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்வதற்குப் பயன்படுத்தும் உத்தியாகும். இன்று கணக்கிலடங்கா விளம்பரங்கள் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக மக்களின் மனப்போக்கை அதற்கேற்றார்போல் வடிவமைக்கப்பெற்று நம்மைத் திணரடிக்கின்றன. மன உறுதி மிக்கவராயினும் நிறுவனங்களின் மனதை மயக்கும் விளம்பரங்களுக்குப் பலர் அடிமையாகிவிடுகின்றனர் என்பதே இன்றைய நிலைமை .
இன்றுபோல் அதிக ஊடகங்கள் இல்லாத அக்காலத்தில் விளம்பரங்கள் செய்ய வானொலி, வார இதழ்கள், நாளிதழ்கள் போன்றவை பயன்பட்டன.
60, 70 வருடங்களுக்கு முன் பத்திரிகைகள், வானொலி தவிர வேறு எந்த ஊடகங்களும் இல்லாத காலக்கட்டத்தில் விளம்பரங்கள் எவ்வாறு நம் வாழ்க்கையில் பங்கு வகித்தன என்பதை இக்கட்டுரை விளக்கும். மேலும் ஒரு பத்திரிகையில் வெளிவரும் விளம்பரங்களைக் கொண்டு அந்தச் சமுதாயத்தின் வளர்ச்சியை, அதன் வரலாற்றை அறிய முடியும்.
சிங்கப்பூரில் வெளிவந்த பொதுஜன மித்தி ரன் (1923), தமிழ் முரசு (1936-1960) ஆகிய பத்திரிகைகள் இக்கட்டுரைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
100 வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் வெளிவந்த தமிழ்ப் பத்திரிகைகளில் விளம்பரங்கள் மிகக் குறைந்த அளவே வந்தன. அக்காலக்கட்டத்தில் நாட்டு நடப்புகளே அதிகம் செய்திகளாக வந்தன. உலகப் போர் நிகழ்வுகள், ஜப்பானிய ஆட்சி , இந்திய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள், காலனித்துவச் செய்திகள் ஆகியவை அதிகம் இடம்பெற்றன.
1920களில் வெளிவந்த விளம்பரங்கள் அக்கால மக்களின் தேவைகள், கலாசாரம், அந்நிய அரசாங்கத்தின் பாதிப்பு, மக்களின் விருப்பங்கள், வாழ்க்கைத்தரம் போன்றவற்றைப் பிரதிபலித்தன.
பொதுஜன மித்திரன்
1920களில் வெளிவந்த இப்பத்திரிகையில் விளம்பரங்கள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தன.
அக்காலக்கட்டத்தில் காப்புறுதித் திட்டங்கள், உடலுக்குச் சக்தியூட்டும் மருந்துகள் அதிகமாக விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளன. ஒரே மருந்து பலவகையான நோய்களைக் குணப்படுத்துவதாகப் பல விளம்பரங்களைக் காணலாம். அடுத்ததாகத் தலைமுடிக்கான தைலம் அல்லது எண்ணெய் விளம்பரங்கள் அதிகமாக உள்ளன. இனிப்புச் சுவை நீர் (சோடா), தனியார் மருந்தகங்கள் போன்ற விளம்பரங்களும் உள்ளன.
(வலது) நெருப்பு, கடல், வாகன விபத்து, வணிகம் நலிவடைதல் போன்ற பலவகையான இழப்புகளுக்கு காப்புறுதி வழங்கப்படுகிறது. படம் மறு ஆக்கம் செய்யப்ப ட்டது. பொதுஜன மித்திரன் [Potujana mittiran]. (1923, டிசம்பர் 8) (பக். 1). (Call no.: Tamil RCLOS 059.94811 PM)
மருந்தகங்கள் தங்கள் தயாரிப்புகளை எடுத்துக்கொண்டால் உடல் சோர்வு, இரத்தச் சோகை, விஷக்காய்ச்சல் , நரம்புத் தளர்ச்சி என பலவகையான நோய்கள் குணமாகுமென்று விளம்பரப்படுத்துகின்றனர். அத்துடன் அதை எவ்வாறு எடுத்துக்கொள்ளவேண்டும் அல்லது பயன்படுத்தவேண்டும் எனவும் விளக்குகின்றன.
அக்காலத்தில் மக்களிடையே சாதிபாகுபாடு அதிகமாக இருந்தது. உணவகத்தில் மிகவும் ஆசாரமாகத் தயாரிக்கப்பட்ட பானங்கள், உணவுகள் கிடைக்குமென்றும், உயர் பதவியில் வேலை செய்பவர்களுக்குத் தங்க இடம் ஏற்பாடு செய்துத்தரப்படுமென்றும் விளம்பரங்களைக் காணலாம்.
தமிழ் முரசு
1935 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சிங்கப்பூரில் வெளிவருகின்ற ஒரே தமிழ் பத்திரிகை இதில் சர்வரோக நிவாரணிகள், உடலுக்கு சக்தி தரும் மருந்துகள், கூந்தல் தைலம், திரைப்படங்கள், மது வகைகள், குறிப்பாக திராட்சை ரசம், பீர் சுருட்டு (சிகரெட்) போன்ற விளம்பரங்கள் அதிகமாக வெளிவந்தன.
குல்பஹார் வாசனை எண்ணெய், சந்தன எண்ணை விளம்பரங்கள், கோகுல் கூந்தல் எண்ணெய் என இதுபோல் பல நிறுவன கூந்தல் எண்ணெய்களின் விளம்பரங்கள் அதிகமாக வந்தன. அனைத்துத் தைலங்களும் முடி கொட்டுதல் உடல் சூடு போன்ற பல பிரச்சனைகளைத் தீர்க்கும் என்பதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளன.
மிக அதிகமாக வந்த விளம்பரங்களுள் உடல் சக்தியைக் கூட்டும் மருந்துகளும் ஒன்று. ஆண்களின் சக்தியை மேம்படுத்துவதாகக் காட்டப்படுகிறது. காந்தரசம் என்ற நிறுவனம் தயாரிக்கும் லேகியத்தை உண்டால் சிங்கத்தையே அடக்கும் சக்தி பெற்றவராகிவிடுவர் என்று விளம்பரம் கூறுகிறது. இம்மருந்தை தயாரித்த காந்தரசம் என்ற மருந்து நிறுவனம் திரு அ.சி சுப்பையா அவர்களால் சிங்கப்பூரில் 1930 முதல் 1955 வரை நடத்தப்பட்டது.
அக்காலக்கட்டத்தில் அதிகமாக யுனானி மருந்தகங்கள் செயல்பட்டுவந்தன. இன்று அவை வழக்கில் இல்லை. பலவிதமான நோய்களுக்கும் இங்கு மருந்துகள் கிடைக்கும். சித்தவைத்திய நிலையங்களும் பரவலாக இருந்தன. இனிப்பு நீர், சயரோகம் போன்ற நோய்களைக் குணப்படுத்துவதாக விளம்பரம் உள்ள து. அக்காலக்கட்டத்தில் சயரோகம் பலருக்கு இருந்ததால் பல விளம்பரங்களில் அதைப்பற்றிக் காணலாம். 1936 ஆம் ஆண்டு வெளிவந்த விளம்பரம் வணிகக் கண்காட்சியைப் பற்றி அறிவிக்கிறது. பெண்களைக் கவரும் வண்ணம் அவர்களுக்கு அழகூட்டும் பொருட்கள் இக்காண்காட்சியில் கிடைக்கும் என்கிறது விளம்பரம். அக்காலக்கட்டத்திலேயே வணிகக் கண்காட்சி நடந்ததைக் காட்டுகிறது.
(இடது மற்றும் வலது மேலே) சின்சியர் மருந்தகம் தங்கள் மருத்துகள் பலவகை கயான நோய்களுக்குத் தீர்வு என்றும், மலிவு விலையில் கிடைக்குமென்றும் அறிவிக்கின்றன. படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. பொதுஜன மித்திரன் [Potujana mittiran]. (1923, டிசம்பர் 8) (பக். 1). (Call no.: Tamil RCLOS 059.94811 PM). சின்சியர், மருந்தகம், சூலியா ஸ்ட்ரீட் , லீ கிப் லின் தொகுப்பிலிருந்து காப்புரிமைக்குட்பட்டது, லீ கிப் லின் மற்றும் தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர், 2009.
இன்று பிரபலமாக இருக்கும் மைலோ 1930களில் இல்லை. ஓவல்டின் பானமே மக்களின் சத்து பானமாக விளங்கியது. இன்று வரும் விளம்பரங்கள்போல இந்தப் பானத்தைப் பருகினால் அனைத்துவித ஊட்டச்ச த்துகளும் பெற்று ஆரோக்கியமாக வாழலாம் என உறுதியளிக்கிறது.
அக்காலக்கட்டத்தில் , மதுவகைகள் குறிப்பாக, திராட்சை ரசம், பீர் போன்றவை ஆரோக்கிய பானம் எனவும், இவைகளை அருந்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் கூறும் விளம்பரங்களைக் காணலாம்.
1930களில் புகைப்பது நாகரிகமாகக் கருதப்பட்ட காலம். இந்திய மங்கைகள் புகைப்பது போன்ற விளம்பரங்கள், ஆண்களும் பெண்களும் புகைப்பது போன்ற விளம்பரங்கள் அதிகம் வெளிவந்தன.
அக்காலக்கட்டத்தில் திரைப்படங்கள், நாடகங்கள் பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது போன்றவைகளே மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களாக இருந்தன. தமிழ் நூல் நிலையங்கள் பல இயங்கின. நம் முன்னோடி எழுத்தாளர்கள் பலர் இந்நூல் நிலையங்களுக்குச் சென்று தங்கள் தமிழ் அறிவை வளர்த்துக்கொண்டனர்.
விளம்பரங்கள் நமக்கு பொருட்களைப் மட்டும் அறிமுகப்படுத்துவதில்லை. அக்கால நாகரிக வளர்ச்சி, மக்களின் ஆரோக்கியம், பொழுதுபோக்குகள், பழக்க வழக்கங்கள், நாட்டின் பொருளாதாரம் போன்ற பலவற்றை நாம் அறிந்துகொள்ளலாம். மக்களின் வாழ்க்கை உயர உயர, விளம்பரங்கள் அதற்கேற்றாற்போல் மாற்றம் காண்கின்றன. ஆய்வாளர்களுக்கு இவை மிகவும் பயன்படும் ஒரு வளமாகும்.
தமிழ் நூல் நிலையம். அக்காலத்தில் பல தமிழ் நூல் நிலையங்கள் இயங்கின. படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழ் முரசு [Tamil Murasu], 3 மார்ச் 1941, பக். 10.
குல்பஹார் வாசனை எண்ணெய் அனைத்துவித முடிப் பிரச்சனைகளுக்கும் இந்த எண்ணெய் ஒரு தீர்வாகும் என்ற விளம்பரம். படம் மறு ஆக்கம் செய்யப்ப ட்டது. தமிழ் முரசு [Tamil Murasu], 5 மே 1936, பக். 1.
மஹா வீர்ய விர்த்தி லேகியம் என்ற மருந்தின் விளம்பரம். இந்த லேகியத்தை உண்டால் சிங்கத்தையே அடக்கும் சக்தி பெற்றவராகிவிடுவர் என்று விளம்பரம் கூறுகிறது. படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழ் முரசு [Tamil Murasu], 8 பிப்ர வரி 1939, பக். 3.
ஜோதி சித்த வைத்திய நிலையம். சித்தவைத்திய நிலையங்களும் பரவலாக இருந்தன. இனிப்பு நீர், சயரோகம் போன்ற நோய்களைக் குணப்படுத்துவதாக விளம்பரம் உள்ளது. படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழ் முரசு [Tamil Murasu], 13 ஜனவரி 1954, பக். 9.
மால்பரோ திரையரங்கில் வெளிவந்த சேவாசதனம் திரைப்படம். படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழ் முரசு [Tamil Murasu], 1 மார்ச் 1939, பக். 8.
1936 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த விளம்பரம் வணிகக் கண்காட்சியைப்பற்றி அறிவிக்கிறது. பெண்களைக் கவரும் வண்ணம் அவர்களுக்கு அழகூட்டும் பொருட்கள் இக்காண்காட்சியில் கிடைக்கும் என்கிறது விளம்பரம். படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழ் முரசு [Tamil Murasu], 5 மே 1936, பக். 5.
புலி மார்க் பீர் விளம்பரம். அக்காலக்கட்டத்தில், மதுவகைகள் குறிப்பாக, திராட்சை ரசம், பீர் போன்றவை ஆரோக்கிய பானம் எனவும், இவைகளை அருந்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் கூறும் விளம்பரங்களைக் காணலாம். படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழ் முரசு [Tamil Murasu], 5 மே 1939, பக். 1.
கிரவன் ஏ 1930களில் புகைப்பது நாகரிகமாகக்கருதப்பட்ட காலம். இந்த விளம்பரத்தில் சேலை கட்டிய இந்திய மங்கை கையில் புகையும் வெண்சுருட்டோடு காட்சியளிக்கிறார். படம் மறு ஆக்கம் செய்யப்ப ட்டது. தமிழ் முரசு [Tamil Murasu], 10 அக்டோபர் 1939, பக். 6.
படங்கள் ஆதாரக் குறிப்புகள்
பிரிட்டிஷ் ட்ரேட் கண்காக்ஷி. (1936, மே 5). தமிழ் முரசு [Tamil Murasu], பக் 5. Retrieved from NewspaperSG.
ஈஸ்டர்ன் யுனைடெட் அசூரன்ஸ் கார்பரேஷன் லிமிடெட். (1923, டிசம்பர் 8). பொதுஜன மித்திரன் [Potujan̲a mittiran] (பக் 1). London: British Library. (Call no.: Tamil RCLOS 059.94811 PM)
குல்பஹார் வசனை எண்ணை. (1936, மே 5). தமிழ் முரசு [Tamil Murasu], பக் 1. Retrieved from NewspaperSG.
Hinnam & Little Dispensary Limited. (1923, டிசம்பர் 8). பொதுஜன மித்திரன் [Potujan̲a mittiran] (பக் 7). London: British Library. (Call no.: Tamil RCLOS 059.94811 PM)
இந்தியன் காப்பி கிளப். (1923, டிசம்பர் 15). பொதுஜன மித்திரன் [Potujan̲a mittiran] (பக் 8). London: British Library. (Call no.: Tamil RCLOS 059.94811 PM)
ஜோதி சித்த வைத்திய நிலையம். (1954, ஜனவரி 13). தமிழ் முரசு [Tamil Murasu], பக் 9. Retrieved from NewspaperSG.
காந்தரசம் கம்பெனி: சித்த வைத்திய பார்மசி [Kāntaracam kampen̲i: Citta vaittiya pārmaci]. (1930). Singapore: Victoria Press. (Call no: RCLOS 615.321 KAN)
கிரவன் ஏ. (1939, அக்டோபர் 10). தமிழ் முரசு [Tamil Murasu], பக் 6. Retrieved from NewspaperSG.
மகா வீரியவிருத்தி லேகியம். (1939, பிப்ரவரி 8). தமிழ் முரசு [Tamil Murasu], பக் 3. Retrieved from NewspaperSG.
புலிமார்க் பீர். (1939, மே 5). தமிழ் முரசு [Tamil Murasu], பக் 1. Retrieved from NewspaperSG.
சேவாசதனம். (1939, மார்ச் 1). தமிழ் முரசு [Tamil Murasu], பக் 8. Retrieved from NewspaperSG.
தமிழ் நூல் நிலையம். (1941, மார்ச் 3). தமிழ் முரசு [Tamil Murasu], பக் 10. Retrieved from NewspaperSG.
வாஜீகரண தைலம். (1923, டிசம்பர் 12). பொதுஜன மித்திரன் [Potujan̲a mittiran] (பக் 1). London: British Library. (Call no.: Tamil RCLOS 059.94811 PM).